ரெயில் பயணியை கம்பால் தாக்கியதால் தலை சிதறி பலி..! செல்போன் பறிப்பு கொள்ளையர் அட்டகாசம்
சென்னை கொருக்குப்பேட்டைரயில் நிலையம் அருகே கோரமண்டல் விரைவு ரயிலில் படிக்கட்டில் உட்கார்ந்து செல்போன் பார்த்தபடி பயணம் செய்த வட மாநில இளைஞரின் கையில் இருந்து செல்போனை பறிக்க கட்டையால் தாக்கிய போது அவர் தவறி விழுந்து தலை சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த 24 வயதுடைய ரோனி சேக் என்பவர் , 20 தேதி அன்று சந்தர்காசி ரயில் நிலையத்திலிருந்து கேரளாவின் மலப்புரத்திற்கு கொத்தனார் வேலை செய்வதற்காக உறவினர் அஷ்ரப் சேக் உடன் கோரமண்டல் விரைவு ரயிலில் புறப்பட்டார்.
ரெயிலில் எஸ் 4 பெட்டியின் வாசலில் படிக்கட்டில் உட்கார்ந்து படம் பார்த்தவாரே பயணம் செய்து கொண்டு வந்தார். சனிக்கிழமை மாலை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள குடிசை பகுதிகளை ரெயில் கடந்த போது , யாரோ மர்ம நபர் கட்டையால் ரோனி சேக் கையில் அடித்து செல்போனை பறிக்க முயன்றுள்ளான்.
இதில் ரோனி சேக் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்த வேகத்தில் தலை சிதறியும், வலது கை மணிக்கட்டு உடைந்தும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொருக்குப்பேட்டை போலீசார், ரோனி சேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணையை முன்னெடுத்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் படிக்கட்டில் அமர்ந்திருந்த ரோனி சேக்கை , இரு இளைஞர்கள் கட்டையால் தாக்கி செல்போனை பறிக்க முயன்ற போது அவர் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து அதே பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்களான விஜய், விஜய்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் வெங்கடேசன் கூறும் போது, சென்னை கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரம் பகுதியில்
கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ள இளைஞர்கள், வடமாநிலத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் விரைவு ரயிலில் படிக்கட்டில் உட்கார்ந்து செல்போன் பார்த்தபடி பயணம் செய்பவர்களையும், நின்று கொண்டு செல்போன் பேசியபடி செல்பவர்களையும், காக்கா முட்டை படம் பாணியில் கம்பை வைத்து அடித்து செல்போனை பறித்து சென்று, அதனை பர்மா பஜார் மற்றும் ரிச்சி தெருவில் உள்ள செல்போன் கடையில் விற்று பணத்தை வாங்கி கஞ்சா அடித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
இதே பகுதியில் சி.ஐ.எஸ்.எப் வீரரிடம் இதே பாணியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது, அவர் யாரோ தள்ளி விட்டு விட்டதாக கூறியதால் இந்த செல்போன் பறிப்பு கும்பல் தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பகுதியில் அடிக்கடி இதுபோல சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால், ரயில்வே போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ரெயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது
Comments